

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதன்மூலம் புதிதாக உதயமாகும் தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 30-ம் தேதி தெலங்கானா பகுதியில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் 17 நாடாளு மன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலை யில், கட்சித் தலைவர் கே. சந்திர சேகர் ராவ் வெள்ளிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட் டார். அத்துடன் சட்ட சபைக்கு போட்டியிடும் 69 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலையும் வெளியிட்டார். இதன்படி, சந்திரசேகர் ராவ் மேதக் மாவட்டம் கதவால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுவரை மக்களவை உறுப்பினராக இருந்துவந்த ராவ், இம்முறை சட்டசபைக்கு போட்டியிடுவதால் தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக அவர் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டிஆர்எஸ் கட்சி யிலிருந்து விலகி தங்கள் கட்சியில் இணைந்த நடிகை விஜயசாந்தியை ராவுக்கு எதிராக களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.