

திமுக முன்னாள் அமைச்சர் ராஜா சம்பந்தப்பட்ட 2ஜி ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக மத்திய தொழிற்சாலை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "திமுக முன்னாள் அமைச்சர் ராஜா சம்பந்தப்பட்ட 2ஜி ஊழல் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. 2ஜி ஊழலுக்கு காரணம் ராஜாவே, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இந்த ஊழலில் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார்.
மேலும், ஈழத் தமிழர் விவகாரமோ, இல்லை தமிழக மீனவர்கள் பிரச்சினையோ தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.
மோடி அலை இல்லை:
நேற்று (ஞாயிற்றுக் கிழமை) பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து, "தமிழகத்தில் மோடி அலை வீசுவது போல் ஒரு மாயை ஏற்படுத்த காவிக் கட்சி மேற்கொண்ட ஒரு முய்றசி. தமிழகத்தில் நிஜமாக மோடி அலை வீசவில்லை" என்றார்.