காங்கிரஸ் தனி மனிதரை முன்னிறுத்துவது இல்லை: ராகுல்

காங்கிரஸ் தனி மனிதரை முன்னிறுத்துவது இல்லை: ராகுல்
Updated on
1 min read

"காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கான கட்சியாகவே இருந்து வருகிறது. பாஜகவை போல் நாங்கள் தனி மனிதரை முன்னிறுத்துவது இல்லை" என்றார் ராகுல் காந்தி.

அசாம் மாநிலத்தில் உள்ள உதர்பாண்ட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "பாஜக தனி மனிதர் ஒருவரை மக்களிடையே முன்னிறுத்தி, அவர் (மோடி) பிரதமரானால் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. ஆனால், காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கான கட்சியாகவே இருந்து வருகிறது.

நாட்டின் பலம் ஒரு தனிப்பட்ட மனிதரிடம் இருப்பது அல்ல; அவை, ஒவ்வொரு மக்களிடமும் இருக்க வேண்டியதாகும். குஜராத் மாடல் என்ற மாயையை பாஜக நாடெங்கிலும் திணிக்க நினைக்கிறது. அசாம் மாநிலத்தைப் பொருத்தவரை, இங்கு அசாம் மாடல்தான் தேவைப்படுகிறதே தவிர, குஜராத் மாடல் அல்ல.

குஜராத்தில் ஏழை மக்கள் கனவு காண முடியாது. அங்கு பணக்காரர்களால் மட்டுமே கனவு காண முடியும். ஆனால், காங்கிரஸ் கட்சி, நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் கனவு காண வேண்டும் என்று நினைக்கிறது. நாட்டில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள், கூலிகள் என அனைவருக்கும் அவர்களது பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்து கனவு காணும் உரிமை உண்டு.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதாக பாஜக பேசுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் இருக்க பாஜகதான் அனைத்து இடையூறுகளையும் செய்தது" என்று ராகுல் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in