

சிறுபான்மை மக்களுக்கு பாடுபடுபவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கரூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சின்னசாமிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி பாளையம், ஈசநத்தம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் சின்னசாமிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். பள்ளப்பட்டியில் அவர் பேசியதாவது: நான் திமுக.வைச் சேர்ந்தவளாக இங்கு வரவில்லை, உங்களில் ஒருத்தியாக, உங்கள் வீட்டு மருமகளாக, மகளாக உங்கள் முன்பு வந்துள்ளேன். நீங்கள் கடந்த முறை தம்பிதுரைக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்தீர்கள். உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள், அவர் ஒரு முறை யாவது உங்களை சந்திக்க வந்தாரா? உங்களுக்காக எதுவும் செய்தாரா? நீங்கள் மின்சாரம் இல்லாமல் இருளிலும், புழுக்கத் திலும் தவிக்கின்றீர்கள். தொழில் வளர்ச்சி, கழிவுநீர் பிரச்சினை என்று தொகுதிக்காக எதையுமே அவர் செய்யவில்லை.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, சிறுபான்மை மக்க ளுக்காக பாடுபடுபவர். இஸ்லாமிய மக்களின், உரிமை களை நிலைநாட்டி பாதுகாக்கும் பாதுகாவலர். கடந்த முறை சட்டப் பேரவைத் தேர்தலில் பள்ளப்பட்டியில் 18 ஆயிரம் வாக்குகள் அளித்து திமுக.வின் கே.சி.பழனிச்சாமியை வெற்றிபெற வைத்தீர்கள். இந்த முறை மக்களவைத் தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சின்னச்சாமியை வெற்றிபெற வைக்க வேண்டும். ஒரு சாமியை (கே.சி.பழனிச்சாமி), ஜெயிக்க வைத்த நீங்கள் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் இன்னொரு சாமியை (சின்னசாமி) ஜெயிக்க வைக்க மாட்டீர்களா? கண்டிப்பாகச் செய்வீர்கள்.
சின்னசாமியும், கே.சி.பழனி சாமியும் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். இந்த வெற்றியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடிவெடுப்பதில் திமுக ஒரு முக்கிய அங்கமாகத் திகழும். அதனால் தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்றார்.