குழந்தைத்தனமாக பேசும் ராகுல் காந்தி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டல்

குழந்தைத்தனமாக பேசும் ராகுல் காந்தி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டல்
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குழந்தைத்தனமாக பேசி வருகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாகக் கூறியுள்ளார்.

வெடித்துச் சிதறப்போகிறது பாஜக பலூன், ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கிடைப் பதுபோல தொழிலதிபர்களுக்கு குஜராத் மாநில அரசு குறைந்த விலையில் நிலங் களை அளிக்கிறது என்று ராகுல் காந்தி அண்மையில் நடைபெற கூட்டம் ஒன்றில் பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலம், ஹஸாரிபாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த தேர்தலில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் படும் என நினைத்தேன். பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசி வருகின்றனர்.

ஆனால், இன்னொரு கட்சியில் (காங் கிரஸ்) ஒரு விளையாட்டுப்பிள்ளை (ராகுல் காந்தி) இருக்கிறார். அவர் இன்னும் குழந்தைத்தனமாக பேசி வருகிறார். தனது பிரச்சாரத்தின் முதல் பத்து நாள் களாக ‘பலூன்’ என்ற வார்த்தையை ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் பேசி வந்தார். குழந்தைகள் ஒரே பொருளை வைத்து நீண்ட நாள்கள் விளையாடாது. எனவே, இப்போது புதிதாக மிட்டாய் என்ற வார்த்தையை கூறத் தொடங்கியுள்ளார்.

இப்போது நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள். பலூனை வைத்து விளையாடும் வயது எனக்கு இல்லை.

பலூனை வைத்து விளையாடுபவரும், மிட்டாய்க்காக ஏங்குபவரும்தான் உங்களுக்கு வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் சிறுவனாக இருந்தபோது டீ விற்பனை செய்திருக்கிறேன். அப்போது மிட்டாய்கள் எனக்கு கிடைத்ததில்லை. ஆனால், வெற்றிக்கோப்பைகளை கைப்பற்ற வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தேன். ஆனால், பிரதமரின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாருவின் புத்தகத்தைப் படித்த பின்புதான் தெரிந்தது, அவரை தாக்கிப் பேசியது தவறு என்று. அவர் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளுக்கும் தாயும், மகனும், மகளும், மருமகனும்தான் பொறுப்பு. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

சஞ்சய பாரு எழுதிய நூலில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் எதுவும் இல்லை. சோனியா காந்திதான் உண்மையான அதிகார மையமாக உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

-பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in