இது எம் மேடை: கஸ்தூரி ரங்கன் அறிக்கையிலிருந்து விலக்கு தேவை!

இது எம் மேடை: கஸ்தூரி ரங்கன் அறிக்கையிலிருந்து விலக்கு தேவை!
Updated on
1 min read

ஆர்.டி. அசோக்குமார் - ஏலக்காய் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகள் சுற்றுச்சுழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, கம்பம் மெட்டு, கம்பம் டவுன், கடமலைக்குண்டு, மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகள் அந்த வரையறைக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அணைகள் கட்டக் கூடாது. மருத்துவமனை கட்டக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பகுதியில் மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. கேரளாவில் இந்த அறிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியதால், சுற்றுச்சூழல் பகுதியில் இருந்து 3,116 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏலக்காய் அதிகம் சாகுபடி செய்யப்படும் தேனி மாவட்டப் பகுதிகளுக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கை விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஏலக்காய் விவசாயம் இங்கு அழிந்துவிடும்.

தேனி மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்புக்காக கேரளாவை நம்பியுள்ளனர். ஆனால், இங்கிருந்து கேரளாவின் பல பகுதிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், தொழிலாளர்கள் ஜீப்பில் கேரள எஸ்டேட் வேலைக்குச் செல்கின்றனர். ஜீப் டிரைவர்கள் மீது போலீஸார் அடிக்கடி வழக்குகளைப் பதிவு செய்வதால், அவர்களும் வர மறுக்கின்றனர். தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர புதிய வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in