

மூன்றாவது அணி ஆட்சியில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ், 3-வது அணி ஆகியவை இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் சில நாட்களுக்கு முன்பு பேசியபோது, மத்தியில் ஆட்சி அமைக்க மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் அல்லது மூன்றாவது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார்.
3-வது அணிக்கு ஜெய்ராம் ரமேஷ் ஆதரவு
இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
காங்கிரஸின் அடிப்படை கொள்கையின்படி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம். அதாவது பாஜகவோடு தொடர்பில்லாத கட்சிகளுக்கு காங்கிரஸ் நிச்சயம் ஆதரவளிக்கும்.
1996-ல் அப்போதைய ஐக்கிய முன்னணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. இதேபோல் 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். அப்போது மத்திய அரசு பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தது.
இப்போதைய நிலையில் வெளியில் இருந்து ஆதரவளிப்பது ஏற்புடையதாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை 3-வது அணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அகமது படேல் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
மதவாத சக்திகள் (பாஜக) மத்தியில் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டுவது அபத்தமானது. காங்கிரஸின் உயர்நிலைக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக உள்ளேன். ஆட்சியில் நடந்தது, நடப்பது எனக்கும் தெரியும்.
யாராவது ஓர் அமைச்சர், சோனியா காந்திதான் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பார் என்றோ அல்லது அவரிடம் கோப்புகள் செல்லும் என்றோ கூறினால் நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்.
சில நேரங்களில் கட்சியின் கொள்கைசார்ந்த விவகாரங்களில் கட்சியின் கருத்தை அரசுக்கு எடுத்துரைத்திருக்கிறோம். பிரதமரின் செயலாளர் புலோக் சாட்டர்ஜி, சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர் என்று கூறுவதும் தவறான குற்றச்சாட்டு.
பாஜக தலைமையிலான கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசின் மற்றொரு அங்கமாகவே செயல்பட்டது. இவ்வாறு அகமது படேல் கூறினார்.