

நெ
ல்லை சாத்தான்குளம் அருகே உள்ளது சுப்புராயபுரம். சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்கள், இங்கிருக்கும் நேருஜி இந்து ஆரம்பப் பாடசாலைக்குத்தான் வரவேண்டும். தனியார் பள்ளிகளின் ஆங்கில கல்வி மோகம், அடிப்படை வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து ஆரம்ப பாடசாலை ஒரு கட்டத்தில் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இருப்பினும் பள்ளியை நம்பியிருக்கும் ஏழை மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாவதை தடுக்க, ஊர்க்காரர்கள் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். பிறகென்ன மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. 40 ஆண்டுகளாக இயங்கி வந்த பாடசாலை மூடுவிழாவில் இருந்து தப்பியது.
வறுமையில் வாடியபோது வயிற்றுப் பசி தீர்ந்ததோ இல்லையோ அறிவுப் பசியை போக்கிய, தான் படித்த பள்ளிக்காக மற்றவர்களுடன் இணைந்து உதவி செய்தவர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் சிவலிங்கம். அப்போது உதவி செய்யத் தொடங்கிய பணி இன்றும் தொடர்கிறது.
1960-களில் பிழைப்பைத் தேடி சுப்புராயபுரத்தில் இருந்து பொள்ளாச்சி பக்கம் சென்ற சிவலிங்கத்தின் 6 பிள்ளைகளில் கடைசி மகன் இவர். சிறு வயதில் வறுமையை தின்று வளர்ந்தவர், இன்று சிறிய அளவி லான தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். பட்டப்படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். உதவிகளில் சிறந்தது ஒருவருக்கு தடையில்லா கல்வி கிடைக்கச் செய்வதுதான். இதன் வெளிப்பாடு தான் ஆரம்ப பாடசாலையை பாதுகாக்க தன் பங்குக்கு உதவியது. அத்துடன், தான் பிளஸ் 2 வரை படித்த முதலூர் மேல்நிலைப் பள்ளியிலும் ரூ.7.5 லட் சம் மதிப்பீட்டில் நவீன வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் கட்ட உதவியிருக்கிறார். முதல்கட்டமாக ரூ.3.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டு பணிகள் நடக் கின்றன.
இதுதவிர பல ஏழை குழந்தைகளின் கல்விக் கட்டணத் தை முழுமையாகவோ அல் லது பகுதி அளவிலோ அவரே செலுத்துகிறார். டிஎன்பிஎஸ்சி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார். உதவும் கரங்கள் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு உணவு, உடை என இவரது சேவைப் பட்டியல் நீள்கிறது. மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு நோயின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு உதவுகிறார். தாய் - தந்தையர் நினைவாக கே.கே.நகரில் அமைத்த நீர்மோர் பந்தல் கோடைகாலம் தோறும் அப்பகுதி வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்க்கிறது.
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை சிறைக்காடு மலைகிராம பழங்குடி மக்கள் மீட்க உதவினர். 40 குடும்பங்களுக்கு மேல் தங்கியுள்ள அந்த மலைகிராம வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. காட்டுத் தீ சம்பவத்தால், இருட் டில் தவிக்கும் அந்த மக்களின் நிலை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அனைத்துக் குடும்பங்களுக்கும் சூரிய ஆற்றலால் இயங்கும் மின்சார விளக்குகளை வாங்கி கொடுத்தனுப்பினார், யாரும் கேட்காமலே.
செய்த உதவிகளை சொல்லிக் காட்டக் கூடாது என்பது இவரது எண்ணம். கடந்த 10 ஆண்டுக்கும் மேலான இவரது சேவையை யாரிடமும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. இவருக்கு பக்கபலமாக இருக்கிறார் மனைவி செல்வி.
இதற்காகவே அவரை சந்தித்தோம். “என் னால் இயன்றதை செய்கிறேன். கல்விக்காக உதவ ஆரம்பித்தது, இப்போது பல தரப்பினருக்கும் உதவுகிறேன். இரைக்க இரைக்க நீர் ஊற்றெடுப்பதைப் போல, மற்றவர்களுக்கு உதவும்போதுதான் செல்வம் பெருகும். நிவாரணம் கிடைத்தவர்கள் மனதார வாழ்த்துவதை கேட்பதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது” என புளங்காகிதம் கொள்கிறார் இந்த நவீன பாரி.