திருவொற்றியூர்: எருமை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்

பெண்ணை முட்டிய எருமை மாடு பெரம்பூர் மாநகராட்சி தொழுவத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெண்ணை முட்டிய எருமை மாடு பெரம்பூர் மாநகராட்சி தொழுவத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
Updated on
1 min read

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணை எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.

தெரு நாய்களுக்கு அடுத்தபடியாக சென்னை மாநகரப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் தொல்லை தொடர் கதையாக உள்ளது. மாநகராட்சியும் ஒரு புறம், சாலையில் சுற்றும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கிறது. முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறை பிடிபட்டால் ரூ.10 ஆயிரம், அதன் பிறகு பிடிபட்டால் உரிமையாளரிடம் மாடுகளை கொடுக்காமல், தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது என நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னொருபுறம், பொதுமக்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் சோமசுந்தர் நகரைச் சேர்ந்தவர் மதுமதி (38). இவர் அதே பகுதியில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த எருமை மாடு அவரை முட்டியுள்ளது. இதில் அவரது ஆடை மாட்டின் கொம்பில் சிக்கிக்கொண்டது.

மேலும், மாடு மதுமதியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “திருவொற்றியூர் பகுதியில் பெரும்பாலானோர் மாடு வளர்க்கின்றனர். அவர்களுக்கு மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பிலும், சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடயை மாட்டை நேற்றே பிடித்துவிட்டோம். அதை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் பராமரித்து வருகிறோம். அதன் உரிமையாளரை தேடி வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in