

கோவை: கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை இம்மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு திறக்க நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையும் ஒன்று. இச்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை 1.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.127.90 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் நீட்டிப்புத் திட்டமாக, கரும்புக்கடையில் இருந்து - ஆத்துப்பாலம் வரை ரூ.265.44 கோடி மதிப்பில் 2.408 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டப் பிரிவில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. இரண்டாம் கட்டப் பிரிவில், சுங்கம் பைபாஸ் சாலையில் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஏறுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறும் வாகன ஓட்டிகள் உக்கடம், ஆத்துப்பாலம் பழைய சுங்கச்சாவடியை கடந்து பாலக்காடு செல்லும் வழித்தடத்திலோ, பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்திலோ இறங்கலாம். அதேபோல், பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏறுதளங்கள் வழியாக ஏறி, ஆத்துப்பாலம் பழைய சுங்கச்சாவடி, கரும்புக்கடை, உக்கடத்தை கடந்து உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வளைவு இறங்குதளம் வழியாக கீழே இறங்கலாம்.
அதேசமயம், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையிலிருந்து மேம்பாலத்தின் மீது ஏறி வரும் வாகன ஓட்டிகள், திருச்சி சாலை, அவிநாசி சாலைக்கு செல்வதற்காக உக்கடம் - சுங்கம் சாலையில் இறங்குவதற்கான இறங்குதளம், ஏறுதளம் அமைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.மேம்பாலத்தின் பெரும்பகுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இம்மேம்பாலத்தை வாகனப் போக்குவரத்து பயன்பாட்டுக்காக இம்மாத இறுதியில் திறக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர், சோதனை ஓட்டமும் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர். இந்த ஆய்வின் போது, திமுக எம்.பி-யான ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இம்மேம்பாலத்தில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சுங்கம் - உக்கடம் சாலையில் இறங்குதளம், ஏறுதளம் அமைக்கும் பணி ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்கப்பட்டு அதுவும் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்” என்றனர்.