“பிரதமர் மோடி ஒரு விஸ்வகுரு என்ற பாஜகவின் பிம்பம் உடைக்கப்பட்டது” - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

“பிரதமர் மோடி ஒரு விஸ்வகுரு என்ற பாஜகவின் பிம்பம் உடைக்கப்பட்டது” - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
Updated on
1 min read

கடலூர்: “திமுகவின் 40-க்கு 40 என்ற வெற்றியால் பிரதமர் மோடி ஒரு விஸ்வகுரு என்ற பாஜகவின் பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது. தற்போது மைனாரிட்டி அரசாக பாஜகவின் மோடி அரசு உள்ளது” என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் சன்னாசிநல்லூர் கிராம மக்கள், 300 பேர் போலீஸ் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் தாக்கினர். தடுக்க முயன்ற போலீஸாரையும் தாக்கியதால், போலீஸார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 29 பேர் இன்று (ஜூன்.14) சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவாகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “40-க்கு 40 என்ற வெற்றியால் தான் பாஜக சுயமாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. பிரதமர் மோடி விஸ்வகுரு என்ற பிம்பத்தை திமுக உடைத்துள்ளது. தற்போது மைனாரிட்டி அரசாக பாஜகவின் மோடி அரசு உள்ளது” என்றார்.

மேலும் “வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் வெளிமாநில பதிவு கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது. அப்படி இயங்கினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in