

ஹை
ட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் திட்டங்களுக்கு இணையாக மத்திய அரசு செயல்படுத்தவுள்ள பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
காவிரி டெல்டா தமிழகத்தின் உயிர் நாடியான விவசாயப் பகுதி. சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான இப்பகுதி விவசாய நிலங்களை நம்பி, லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலையும் நம்பியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சுமார், ஒரு கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி யை செய்து மத்திய அரசின் கிரிஷிகாமன் விருதை தமிழகம் பெற்று வந்துள்ளது. ஆனால், தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாய நிலங்களுக்கும், கடற்கரையோர பகுதிகளுக்கும் பாதிப்பை விளைவிக்கக் கூடிய திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து தற்போதைய மாநில அரசும் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை கடல் மற்றும் தரை பகுதியில் 4,099 சதுர கி.மீட்டரில் எண்ணெய் வயல்கள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கடந்த ஜனவரி மாதம் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ள செய்தி வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்ட நகர்வுக்கு டெல்டா பகுதி மக்கள் தயாரான சூழலில், காவிரி தொடர்பான பிரச்சினைகள் மேலோங்கி மத்திய அரசின் மீதான கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கிடையில் தான் நரிமணம் சிபிசிஎல்லை (CPCL) முதன்மைப்படுத்தி பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்தை அனுமதித்துள்ளதோடு, அவ ரது தலைமையிலான அரசு கடந்த 13.1.2016 அன்று அரசிதழிலும் வெளியிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்தையும் மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொண்டதாக முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு 19.7.2017 அன்று இரண்டாவது முறையாக அரசிதழில் வெளியிட்டது.
அதன்படி கடலூர் வட்டத்தில் திருச்சோபுரம், கம்பளிமேடு, ஆலப்பாக்கம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம், சிதம்பரம் வட்டத்தில் பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னகொம்மட்டி, பெரியகொம்மட்டி, அரியகோஷ்டி, அகரம், பரங்கிப்பேட்டை, மடுவன்கரை, காட்டுவாழ்க்கை, முட்டூர், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, தில்லை நாயன்புரம், பள்ளிப்படை, கொட்டம்குடி, உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை.
சீர்காழி வட்டத்தில், அகரவட்டாரன், வேட்டன்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெய்பத்தூர், தென்னம்பட்டினம், பெருந்தோட்டம் (1), பெருந்தோட்டம் (2), அகரப்பெருந்தோட்டம், திருவெண்காடு, மணிக்கிராமம், மேலையூர், திருமைலாடி, மதானம், கூத்தியம்பேட்டை, பனங்குடி.
தரங்கம்பாடி வட்டத்தில் மேலப்பெரும்பள்ளம், மாமாகுடி ஆகிய 45 ஊராட்சி பகுதி கிராமங்களில் சுமார் 57,000 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமையவுள்ளதாக அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டாவில் கிடைக்கும் கச்சா எண்ணெயை பயன்படுத்தியும், மேலும் இறக்குமதி செய்தும் அதனை சுத்திகரித்து கிடைக்கின்ற மூலப்பொருட்களிலிருந்து ஏராளமான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் தொழிற்பேட்டை அமைத்து உருவாக்குவதற்குப் பெயர்தான் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம்.
அப்படி உருவாக்கும்போது கச்சா எண்ணெயையும், பெட்ரோலிய மண்டலத் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்கள் செய்யும். இதற்கு கடலோர பகுதிகள் உகந்ததாக இருக்கும். அப்போதுதான் சிறு துறைமுகங்களை ஏற்படுத்தி ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகளை செய்ய முடியும் என்பதுடன், தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாகவுள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை சத்தமில்லாமல் செய்யலாம் என்பதற்காகவே இந்தப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடலூர் அருகே மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய கெமிக்கல் ஆலைகளுக்கான மாபெரும் தொழிற்பேட்டை, பெரியப்பட்டு கிராமத்தில் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, மிகப்பெரிய ரசாயன உரத்தொழிற்சாலைகள் மண்டலம், கடலூர், நாகை மாவட்டங்களில் 16-க்கும் மேற்பட்ட பெரிய அனல் மின் திட்டங்கள், திருச்சோபுரம், சிலம்பிமங்கலம், பரங்கிப்பேட்டை, வானகிரி, தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் தனியார் துறைமுகங்கள், திருமுல்லைவாயில் அருகே மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் பெரிய துறைமுகம் ஆகியவை அமைகிறது.
மேலும் பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி துறைமுகம் மற்றும் எரிவாயு அனல் மின் நிலையம், மிகப்பெரிய ஓஎன்ஜிசி திரவ பெட்ரோலிய எரிவாயு குழாய் திட்டம், பெட்ரோலியம், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல் சார்ந்த ஏராளமான துணை ஆலைகள், கடல் நீரை நன்னீராக்கும் பெரிய திட்டங்கள், பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் போன்றவை அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2007-ல் பிசிபிஐஆர் கொள்கை வகுக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு கடலூர், நாகை பிசிபிஐஆர் திட்டத்துக்கான அனுமதியை 4.7.2012 அன்று மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்பின்னர் 20.2.2014 அன்று ஜெயலலிதா தலைமையிலான அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன்னரே கடலூர் பகுதியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நாகார்ஜூனா நிறுவனம் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு பணிகளை தொடங்கி இருந்தது.
அந்த நிறுவனத்தையே ஆதார நிறுவனமாகவும் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்தை 2-வது ஆதார நிறுவனமாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் 2011-ல் தானே புயலில் நாகார்ஜூனா நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பெரும் சேதத்தை சந்தித்ததால் அந்நிறுவனம் பணியை தொடராமல் கிடப்பில் போட்டது.
மத்தியில் 2014-ல் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், பெட்ரோலிய கெமிக்கல் மண்டலப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்பின், பெட்ரோலிய மண்டலத்தை தமிழகத்தில் அனுமதிப்பதற்கான முதல்கட்ட பணி யாக தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
தற்போது நாகார்ஜூனா நிறுவனம் கிடப்பில் போட்ட பணியை துரிதப்படுத்தும் நோக்கோடு 2-வது ஆதார நிறுவனமாக அறிவிக்கப்பட்ட நரிமணம் சிபிசிஎல் மூலம் பணியை விரைவுபடுத்த தற்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் முயற்சித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாகத்தான் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சிபிசிஎல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர், நரிமணம் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.27,460 கோடி முதலீட்டில் 10 எம்எம் டிஏ கொள்ளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையமாக திறன் உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக நரிமணம் சிபிசிஎல் நிறுவனத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து தரவேண்டும் என்றும் தமிழக அமைச்சர்கள் முன்னிலையிலேயே பேசினார்.
இப்படி பெட்ரோலிய கெமிக்கல் மண்டலப் பணிகள் வேகமெடுத்திருப்பதைத் தொடர்ந்து, இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். போராட்டத்துக்கும் பல அமைப்புகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் வ.சேதுராமன் கூறியது: கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமையவுள்ள பெட்ரோலிய மண்டலத்தை சார்ந்து தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளை கடலில் கலந்துவிடுவவதற்கு ஏதுவாகவே இந்தப் பகுதியை தேர்வு செய்துள்ளனர். மேலும் கடலூர், நாகப்பட்டினம் பிசிபிஐஆர் பாராசைலீன் (paraxylene) மற்றும் டெரப்தலிக் ஆசிட் (terepthalic acid) உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.
உலக அளவில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் காரணிகளில் முக்கிய மான ஒன்றாக பாராசைலீன் உள்ளது என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். கடந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நச்சுப்பொருட்களால் ஏற்படும் நோய் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்யும் முகவாண்மையானது (ஏடிஎஸ்டிஆர்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 275 நோய் உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சைலீன் பொருட் கள் 65-வதாக இடம்பெற்றுள்ளது. இது காற்றில் ஆவியாகி கலக்கும் போது பூமியில் ஊடுருவினால் நிலத் தடி நீரையும் கடுமையாகப் பாதிக்கும்.
மேலும், பாரா சைலீனிலிருந்து டெரப்தலிக் ஆசிட்டாக ஆக்சிடேசன் முறையில் வேதியியல் மாற்றம் செய்யும்போது ஆபத்தான நச்சுகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இதுபோன்ற தொழிற்சாலைகளை உருவாக்கும்போது மக்கள் நலனையும் கருத்தில் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூறியது:
கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கொஞ்சம், கொஞ்சமாக பறிபோகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகள் கடலில் கலந்துவிடத் தொடங்கியதில் இருந்து இப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிட்டது. ஏற்கெனவே ஐஎல்எப் அனுமின் நிலையம் வந்தபோது 1300 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. எவ்வித வரன்முறையும் இல்லாமல் அந்த நிலங்கள் வாங்கப்பட்டன. பல பேருக்கு அதற்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல, இதுவரை தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் மீனவர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என எந்த தரப்பினருக்கும் வேலை தரவில்லை.
பொதுமக்களின் அனுமதியின்றி இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டால் அதனை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோலிய கெமிக்கல் மண்டலத்துக்கான கொள்கை கடந்த 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் மத்திய உள்விவகாரங்களுக்கான அமைச்சரவையிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அந்தாண்டே மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. (அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகித்து வந்தது. தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தார்). இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்துதான் மேற்கு வங்கம் நந்தி கிராமில் போராட்டம் வெடித்தது. 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டது. அதே போல கேரளாவும் இத்திட்டத்துக்கு நிலம் ஒதுக்க முடியாது எனக்கூறியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மீத்தேன் திட்டத்தை திமுகதான் செயல்படுத்த துணிந்தது என்று குற்றம் சாட்டிய அதிமுக, இப்போது விவசாயிகள் அச்சப்படுகின்ற, பெட்ரோலிய திட்டங்களையும் பெட்ரோலிய மண்டலங்களையும் செயல்படுத்துவதில் வேகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இரு கட்சிகளுமே திட்டங்களைப் பற்றி ஆராயாமல் காலத்துக்கேற்ப செயல்படுகின்றன.
இதுபோன்ற செயல்பாடுகளால் தான் மத்திய அரசு, தமிழக மக்களின் நலன் குறித்து யோசிக்காமல் டெல்டா பகுதி மக்களே தங்களது விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும் எனக் கருதி எதிர்க்கின்ற திட்டங்களை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக திணித்து வருகின்றன.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பே மாற்றி அமைக்கப்படும். பிரதான தொழிலான விவசாயம் பொய்த்துவிடுவதுடன், அதை நம்பியுள்ள தொழிலாளர்களும் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். காவிரி டெல்டா வளம் பாதிக்கும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.