கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி 5 சிவன் கோயில்களின் தேரோட்டம் கோலாகலம்: மகாமக குளத்தில் இன்று தீர்த்தவாரி

மாசி மகத்தையொட்டி  கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற காளஹஸ்தீஸ் வரர் கோயில் தேரோட்டம்.  (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீஸ்வரர்.
மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற காளஹஸ்தீஸ் வரர் கோயில் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீஸ்வரர்.
Updated on
1 min read

கும்பகோணம்: மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் 5 கோயில்களின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இன்று (பிப்.24) மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு மாசிமக விழாவையொட்டி 5 சிவன் கோயில்களில் கடந்த 15-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 16-ம் தேதியும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீஸ்வரர், சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர், காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசி விஸ்வநாதர், சோமநாயகி உடனாய சோமேஸ்வரர், சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் கோயில்களின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இன்று (பிப்.24) காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, வீதியுலாவாக மகாமகக் குளக்கரைக்கு வந்தடைவார்கள். நண்பகல் 12 மணியளவில் அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.

சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in