நீங்க பாஸ் ஆக வேண்டுமா? 61: ப‌ணம் கொட்டும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

நீங்க பாஸ் ஆக வேண்டுமா? 61: ப‌ணம் கொட்டும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்
Updated on
2 min read

‘திறமை தான் உங்களை கோடீஸ்வரராக மாற்றும். பாடங்கள் அல்ல என்பது அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகியின் புகழ்பெற்ற பொன்மொழி. திறமையை வளர்த்துக்கொண்டால் மாணவர்கள் எவ்வாறு செயலற்ற வருமானம் (Passive income) ஈட்டலாம் என்பதை க‌டந்த அத்தியாயத்தில் அலசினோம். அதன் தொடர்ச்சியை இந்த அத்தியாயத்தில் காணலாம்.

1. பணம் தரும் டிசைனிங் (Designing) கலை

மாணவர்களிடம் இயல்பாகவே ஓவியம்,சிற்பம், வண்ணம் தீட்டுதல், வரைகலை, புகைப்படம் போன்ற திறமைகள் கொட்டிக்கிடக்கும். அதனை தட்டி எழுப்பி நல்ல முறையில் பயிற்சி அளித்தால் சிறந்த திறமைசாலிகளாக மாறிவிடுவார்கள். மாணவர்கள் தங்களின் திறமையுடன் தொழில்நுட்பத்தை கலந்தால் நல்ல டிசைனிங் கலைஞராக மாறிவிடுவார்கள். வாழ்த்து மடல், அழைப்பிதழ், நாட்காட்டி, நாட்குறிப்பு போன்றவற்றை வடிவமைத்து 99 டிசைன்ஸ், அமேசான் போன்ற தளங்களில் விற்கலாம். குறிப்பிட்ட நபருக்காக பிரத்யேகமாக தயாரித்து பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் தேவைக்கு ஏற்றவாறு விற்கலாம். பேனா, நோட்டு, டி ஷர்ட், காபி கப், கீ செயின், ஃபோட்டோ ஃப்ரேம், பேனா, மினியேச்சர் சிலை போன்றவற்றில் நல்ல வருமானம் கிடைக்கும்.

2. யூடியூப் (YouTube) எனும் வரம்

செல்போனின் வருகைக்கு பின்னர் பெரும்பாலானோர் யூடியூப் வாசியாக மாறிவிட்டன‌ர். பொழுதுபோக்கிற்காக யூடியூப் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளதால், அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் அதிகரித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஒரு சிறுவன் தன் தந்தையின் தொழிலை பிரபலப்படுத்த வீடியோ பதிவேற்றி, இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான். தந்தையின் தொழிலும் வளர்ந்துவிட்டது. மாணவர்களும் யூடியூப் சேனல் தொடங்கி நல்ல உள்ளடக்கத்தை (content) வழங்கினால் பார்வையாளர்கள் குவிவார்கள். அதன்மூலம் வருமானம் கொட்டும். நல்ல உள்ளடக்கத்துக்கு தனி வருமானம் கிடைக்கும் அதே சூழலில் விளம்பரம் மூலமாகவும் வருமானம் வரும்.

3. செல்வாக்கு செலுத்தினால் பணம் (Influencer marketing)

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பின்னர், பிரபலங்கள் மூலம் விற்பனை (Influencer marketing) என்ற புதிய வியாபார உத்தி வளர்ந்துள்ளது. இதில் பிரபலமாக இருக்கும் நபர்கள் பொருட்களையும், சேவையையும் பரிந்துரை செய்வார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வாங்குவார்கள். சமூக வலைதளத்தில் நம்பகமான, நெருக்கமான நபர் என்பதால் அவர்களின் தூண்டுதலால் பின்தொடர்பவர்கள் அந்த பொருளை வாங்குவார்கள். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். சமூக வலைதளங்களில் முகத்தைக் காட்ட விரும்பாதவர்கள் கூட, அதில் பக்கங்களை தொடங்கி அதன்மூலம் influencer marketing செய்யலாம்.

4. டிராப் ஷிப்பிங் (Drop Shipping)

அமேசான், பிளிப் கார்ட் போன்ற ஈ சந்தைகள் உருவான பின்னர் ‘ட்ராப் ஷிப்பிங்'என்ற புதிய விற்பனை முறை உருவாகியுள்ளது. இதற்காக கடை, சேமிப்பு கிடங்கு, முதலீடு என எதுவும் தேவை இல்லை. செல்போனை மட்டுமே வைத்துக்கொண்டு ஆன்லைனில் கடை தொடங்க வேண்டும். தரமான பொருட்களை தயாரிக்கும் சிறந்த உற்பத்தியாளர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து பொருட்களின் படங்களை ஆன்லைன் கடையில் பதிவேற்றினால் போதுமானது. அதனைப் பார்த்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால், அதனை உற்பத்தியாளர் அனுப்பி வைப்பார்கள். வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற கமிஷன் ஆன்லைன் கடைக்காரரான உங்களுக்கு வந்துசேரும்.

5. இணைந்த சந்தைப்படுத்தல் (Affiliate Marketing)

கூகுள் பே போன்ற செயலிகளில் வழங்கப்படும் 'ரிவார்ட்' தான் (Affiliate Marketing) லிங்க் மூலம் பொருட்களையோ, சேவைகளையோ பெற்றால் 10 சதவீதம் கழிவு கிடைக்கும். அதன்மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனம் கூகுள் பே நிறுவனத்துக்கு கமிஷன் கொடுக்கும். இதேபோல ஒரு நிறுவனத்தின் பொருளையோ, சேவையையோ ஆன்லைனில் விற்றால் நமக்கும் கமிஷன் கிடைக்கும். சமூக வலைதளம், பிளாக், யூ டியூப், வாட்ஸப் போன்ற பக்கங்களில் உங்களது நட்பு வட்டத்துக்கு ஒரு பொருளை பரிந்துரை செய்ய வேண்டும். அவர்கள் நீங்கள் அனுப்பிய லிங்க் மூலம் பொருளை வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதில் ஒரு பொருளை விற்றால் 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in