

“மு
தலில் வீரர்களை முன் நிறுத்துவேன், அப்படியே அட்டாக் செய்ய குதிரையை களத்தில் இறக்கி விடுவேன்” என போர்க்களத்தில் இருப்பது போல உணர்ச்சிகரமாக தான் விளையாடும் சதுரங்கம் (செஸ்) குறித்து நமக்கு விவரிக்கிறார் 9 வயதே ஆன சிறுவன் ஜெய்கார்த்திக்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய, மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுளை குவித்ததுடன், டெல்லியில் நடந்த காமன் வெல்த் போட்டியிலும் கலந்துள்ள ஜெய்கார்த்திக்கின் செஸ் ரேட்டிங் தற்போது 1,078.
திருவானைக்கோவிலில் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஜெய்கார்த்திக்கை எங்கு செஸ் போட்டி நடந்தாலும் அவருடைய அப்பா செல்வம் அழைத்து செல்ல தவறுவதில்லை. தற்போது புவனேஷ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்குச் சென்றுள் ளார்.
ஜெய்கார்த்திக் செஸ் விளை யாட தொடங்கியதே ஒரு சுவாரசியமான நிகழ்வுதான். சிறு வயதில் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்ற இவரது தந்தை, அத்துடன் அந்த விளையாட்டை மறந்துவிட்டார். தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் மளிகை கடை வைத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மகனின் 6-வது பிறந்த நாளுக்கு செஸ் போர்டு ஒன்றை யாரோ பரிசாகக் கொடுக்க செல்வத்துக்கு செஸ் விளையாட்டு மீண்டும் மனதை ஆக்கிரமித்தது. இந்த நிலையில்தான், மகன் ஜெயகார்த்திக்குக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மகனுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். மதி நுட்பத்துடன் விளையாடத் தொடங்கிய ஜெய்கார்த்திக் 1-ம் வகுப்பு படிக்கும்போதே மாவட்ட அளவிலான போட்டிகளில் அண்டர் 8 பிரிவில் விளையாடினார். அன்றிலிருந்து எங்கு செஸ் போட்டி நடந்தாலும் பங்கேற்க தவறுவதில்லை.
“என் மகனின் ஆசை விஸ்வநாதன் ஆனந்த்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும். முடிந்தால் அவருடன் விளையாட வேண்டும் என்பதுதான்” என்கிறார் செல்வம். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை என்றே படுகிறது. ஏனெனில் சதுரங்கத்தில் சதிராட்டம் ஆடுகிறார் ஜெய்கார்த்திக்.