போவோமா ஊர்கோலம் - 27: செல்லும் இடமெல்லாம் அதிசயங்கள் காத்திருக்கும் லடாக்

போவோமா ஊர்கோலம் - 27: செல்லும் இடமெல்லாம் அதிசயங்கள் காத்திருக்கும் லடாக்
Updated on
2 min read

லடாக்கின் நூப்ரா பகுதி அத்தனை அழகாக இருந்தது. சாகச விரும்பிகளைத் தாண்டி, குடும்பங்களைக் கவர இங்கு அவர்களுக்கென்றே பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துர்துக் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் எல்லைக்கு அடுத்து செல்வது தான் நம் திட்டம். சியாச்சின் பகுதிகளைக் கடந்து தான் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தாங் என்ற கிராமத்துக்குச் செல்ல வேண்டும்.

தாங் கிராமத்துக்கு முன் இந்திய ராணுவத்தின் செக்போஸ்ட் இருந்தது. வரிசையில் நின்று பரிசோதனைகள் எல்லாம் முடிந்து, பர்மிட் சோதிக்கப்பட்டு நம்முடைய அடையாள அட்டைகள் வாங்கிய பிறகே எல்லை பகுதிக்குள் நம்மை அனுமதிக்கிறார்கள். இந்த எல்லையைப் பார்க்க வெளிநாட்டினருக்கு அனுமதி கிடையாது. செக்போஸ்டில் இருந்து கொஞ்ச தூரம் பயணம் செய்ததும் தாங் கிராமம் வந்தது.

எல்லை கோடாக ஓடும் ஆறு

நாம் சென்றிருந்த நேரம் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திருந்தார்கள். இதற்கு முன் நாம் பார்த்த எல்லைகள் எல்லாம் இரும்பு வேலிகளால் பிரிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் அணிவகுத்து இருப்பார்கள். ஆனால், இங்கு அப்படி எதுவும் இல்லை. பெரிய பெரிய மலைகளும் அந்த மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறும் தான் நடுவில் இருந்தது. அந்த ஆறு தான் இந்தியா பாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லையாம். நாம் நின்றிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஆற்றின் மறுகரையில் சிறிய கிராமம் இருப்பதைப் பார்க்க முடியும். அது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பர்னு கிராமம்.

எதிரிகளின் கண்காணிப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற பதாகைகள் அந்த இடத்தில் அதிகம் காணப்பட்டது. 1971ல் நடத்த இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்த எல்லை உருவாகி இருக்கிறது. அங்கிருந்த முதியவர் ஒருவரின் குடும்பத்தினர் இப்போதும் பாகிஸ்தானில் உள்ள பர்னு கிராமத்தில் வசிக்கிறார்களாம். இங்குள்ள பல கிராமத்தினரின் உறவினர்கள் போரின் போது பிரிந்து போய் தற்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவின் வடக்கே இருக்கும் கடைசி கிராமம் இது. இங்கு வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் விவசாயமும் சுற்றுலாவும் தான். இங்கு விளையும் ஆப்ரிகாட் பழங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சாலை ஓரங்களிலேயே ஆப்ரிகாட் பழங்கள் மரத்தில் பழுத்து இருப்பதைப் பார்க்க முடியும். ஆப்ரிகாட் ஜூஸை அருந்திவிட்டு கொஞ்ச நேரம் அங்கிருந்து பாகிஸ்தானைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்து பனாமிக் கிராமத்துக்குக் கிளம்பினோம்.

மாமருந்தாகும் வெந்நீர் ஊற்று

பனாமிக் - லடாக் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு நாம் பார்த்தது ஒரு பேரதிசயம். ஊற்று கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சுடுதண்ணீர் ஊற்று அதுவரை கேள்வி பட்டதே இல்லை. இந்த பனாமிக் கிராமத்தில் மலையிலிருந்து வரும் வெந்நீர் ஊற்று இருக்கிறது. கொதிக்கக் கொதிக்க வரும் ஊற்று அருகே நின்றாலே அந்த சூடை நாம் உணரலாம். ஓடிக்கொண்டிருக்கும் அந்த நீரை கைகளால் தொட முடியாத அளவுக்கு சூடாக இருக்கும். பாட்டிலில் பிடித்துப் பார்த்தால், பிளாஸ்டிக் பாட்டில் உருகிவிட்டது.

மலைகளுக்கு நடுவே இருந்து வருவதால் எந்த மலையிலிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நீரைச் சேமித்து வைத்து, அதைக் குளிக்க பயன்படுத்துகிறார்கள். சல்பர் அதிகமாக இருக்கும் இந்த நீரில் குளிப்பதால் தோல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தீர்வாகும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதனால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க வந்துபோகிறார்கள். இப்படி செல்லும் இடமெல்லாம் லடாக் நமக்கு அதிசயங்களைக் காட்டிக் கொண்டே இருந்தது.

கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை.

தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in