வாழ்ந்து பார்! 52: பொன்னி மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும்?
ஒருவரின் மனஅழுத்தம் அவரது எண்ணங்களிலும் உணர்வுகளிலும் நடத்தைகளிலும் வெளிப்படுவதைப்போலவே, அவர்களது உடலிலும் வெளிப்படுமா? என்று வினவினான் காதர். ஆமாம். நான் சொற்பொழிவாற்ற மேடையேறப் போகும்பொழுது எனது நாவில் வறட்சி ஏற்படும்; உதடுகள் உலர்ந்துவிடும் என்றாள் பாத்திமா.
எனக்கு உள்ளங்கையில் வியர்க்கும் என்றான் முகில். நான் வேகமாக மூச்சுவிடுவேன் என்றாள் கயல்விழி. இதயம் கனமாக இருப்பதாக உணர்வேன் என்றான் தேவநேயன். சிலருக்கு தசைகளில் இறுக்கம், தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகுவலி, கழுத்துவலி, களைப்பு, தூக்கமின்மை, உடல் உதறுதல் ஆகியனகூட ஏற்படலாம் என்றார் எழில்.
முதலில் காரணம் தெரியணும்: மனஅழுத்தத்தைக் கையாள என்ன செய்ய வேண்டும்? என்று வினவினான் முகில். முதலில் மனஅழுத்தத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும். அடுத்து அது எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது என்பதை அறிய வேண்டும். பின்னர் அந்த மனஅழுத்தத்தைக் குறைக்கும் செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார் எழில். இதனை எடுத்துக்காட்டோடு விளக்குங்களேன் என்று வேண்டினாள் மணிமேகலை.
பொன்னி வீட்டுப்பாடங்ளை முடித்த பின்னர் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இரவு 11 மணிக்குத்தான் தூங்குவாள். மறுநாள் காலையில் 7 மணிக்கு நேரமாகிவிட்டதே எனப் பதற்றத்தோடு விழிப்பாள். பரபரவென்று காலைக் கடன்களை முடித்து, குளித்து, சீருடையைத் தேய்த்து அணிந்து,அன்றைக்குத் தேவையான பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் தேடியெடுத்து பைக்குள் திணித்து, அவசர அவசரமாய் உணவு உண்டு பள்ளிக்கு வியர்க்க விறுவிறுக்க ஓடுவாள். பொன்னியின் இந்த மனஅழுத்தத்திற்குக் காரணங்கள் யாவை? என்று வினவினார் எழில்.
பதற்றத்தை குறைக்க வழி? - காலையில் 7 மணிக்கு விழித்தது என்றான் சாமுவேல். அதற்குக் காரணம் அவள் முந்தைய நாள் 11 மணிக்குக் தூங்கியது என்றாள் மணிமேகலை. பள்ளிச்சீருடையைக் கிளம்புபொழுது தேய்த்தது என்றாள் மதி. பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் தேடியெடுத்தது என்றான் அழகன். அதற்கு அவற்றை ஒரே இடத்தில் வைக்காததுதான் காரணம் என்றாள் நன்மொழி. சரி. இவற்றால் பொன்னிக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன, ஏற்பட வாய்ப்புள்ளன? என்று வினவினார் எழில். பள்ளியில் உரிய நேரத்தில் இருக்க முடியாமல் போகலாம் என்றான் தேவநேயன். அவசரத்தில் சரியாகச் சாப்பிடாததால் அவளது உடல்நலம் கெடலாம் என்றாள் தங்கம். தேவையான சில பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் எடுக்க மறந்துவிடலாம் என்றான் சுடர். வியர்க்க விறுவிறுக்க பள்ளிக்கு ஓடுவதால், பள்ளியில் களைப்பாக உணரலாம் என்றாள் கயல்விழி. அருமை என்று பாராட்டிய எழில், இவற்றால் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை பொன்னி எவ்வாறெல்லாம் குறைக்கலாம்? என்று வினவினார்.
முந்தைய நாள் இரவு 9 மணிக்கு உறங்கச்சென்றால், காலையில் 5 மணிக்கு விழிக்கலாம். அதனால் அன்றைய வேலைகளைப் பதட்டமின்றிச் செய்யமுடியும். எனது அனுபவம் இது என்றான் அருளினியன். பள்ளிச் சீருடையை முந்தைய நாள் இரவே தேய்த்துவிடலாம் என்றாள் கயல்விழி. பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் ஒரே இடத்தில் வைத்து எடுக்கலாம் என்றான் காதர். முந்தைய நாளே தேவையான பாடநூல்களையும் குறிப்பேடுகளையும் பள்ளிப்பைக்குள் எடுத்துவைக்கலாம் என்றாள் இளவேனில். அவற்றை மட்டுமல்ல, தேவையான எழுதுபொருள்கள் போன்றவற்றையும் முந்தைய நாளே எடுத்துவைத்துவிடலாம் என்றான் சாமுவேல். இவற்றை பொன்னி ஒருநாள் மட்டும் கடைபிடித்தால் போதாது. ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டும் என்றான் அழகன். பொன்னி கடைபிடிப்பது இருக்கட்டும். நீங்கள் அனைவரும் கடைபிடிப்பீர்களா? என்று வினவினார்எழில். கடைபிடிப்போம் என்றனர் அனைவரும் ஒரே குரலில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com
