

கோ
வை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றுபவர் ரங்கசாமி (50). வாருகோல் பிடித்து துப்புரவுப் பணி யில் ஈடுபடும் இவர், எழுதுகோல் பிடித்து இலக்கியப் பணியும் ஆற்றுகிறார். இலக்கிய வட்டாரத்தில் இவரது பெயர் கைநாட்டுக் கவிஞர் ஏகலைவன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் எழுதத் தொடங்கி, நடிக்கவும் செய்துள்ளார். பின்னர் ‘ஏகலைவன்’ என்ற கூத்துப்பட்டறையைத் தொடங்கி, மதுரை வீரன் வரலாறு மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்களை கோயில் திருவிழாக்களில் இலவசமாக நடத்தியுள்ளார். சமூக அலவலங்களைத் தோலுரிக்கும் நாடகங்களை தற்போதும் நடத்தி வருகிறார். மாவட்ட நாடகக் குழு நடத்தும் நாடக விழாவில் பலமுறை பரிசுகளையும் வென்றுள்ளார். இதுதவிர, பல நாடகங்கள், நாடகங்களுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய ‘இருட்டில் வாழும் வெளிச்சங்கள்’ என்ற கவிதை நூலை கோவையில் சமீபத்தில் நடந்த பெரியார் நினைவு தின விழாவில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் வெளியிட, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக்கொண்டார். ‘துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்கள், சமூகக் கொடுமை, மரம் வளர்ப்பு தொடர்பான கவிதைகள், கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளிவந்துள்ளது.
துப்புரவுத் தொழில் செய்த தம்பதியின் மகனாகப் பிறந்த ரங்கசாமி, பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சிப் பள்ளியில் 2-ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். இவரது மனைவியும் துப்புரவுப் பணியாளர்தான். தன் சொந்த முயற்சியால் பல்வேறு புத்தகங்களைப் படித்து, இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட ரங்கசாமி, சாக்கடைகளை தூய்மை செய்வது, பராமரிப்பது ஆகிய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தும் நிலை மாற வேண்டும் என்பதுதான் தன் ஆசை என்று கூறுகிறார். அடுத்ததாக, ‘உரைநடையில் உரைவீச்சு மெய்யா.. பொய்யா..’ என்ற நூலை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் இந்தப் படிக்காத மேதை.
படங்கள்: ஜெ.மனோகரன்