யானைகளின் வருகை 94: ஈட்டி மரக்கொள்ளையர்கள்!
யானைகளுக்குப் பிடித்தமான மூங்கில் மரக்காடுகளை மட்டுமல்ல; ரோஸ்வுட் எனப்படும் விலை மதிக்க முடியாத ஈட்டி மரங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குவதுதான் நீலகிரி கூடலூர் வனப்பகுதி.
அதனால் இங்கு நடந்து வரும் மரக்கொள்ளைகளுக்கும் அளவேயில்லை. அதில் தமிழ் சினிமாவை மிஞ்சும் ஒரு மரக்கடத்தல் சம்பவம் ஒன்று கடந்த 2005 செப்டம்பர் மாதத்தில் நடந்தேறியது. கூடலூரில் உள்ள மார்த்தமா நகர் அருகே உள்ள தனியார் எஸ்டேட்டில் நெடித்து வளர்ந்திருந்த ஒரு ஈட்டி மரம் காணாமல் போய்விட்டது. அந்த எஸ்டேட்காரர் வனத்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார். குற்றவாளியை தேடிப்பிடிக்க வேண்டிய வனத்துறை, புகார் கொடுத்தவர் மீதே வழக்கு போட்டு சிறையில் தள்ளி விட்டது.
இதே போன்று சில சம்பவங்கள் கூடலூரில் நடக்க அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், கட்சியினரும் பொங்கி எழுந்து விட்டனர். வனத்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தியிருக்கின்றனர். எதற்கும் வனத்துறை அசையவில்லை. இப்படி புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் போடுவது தொடர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் உள்ளூர் பாமகவினர், 'மரம் கடத்தும் மாஃபியா தலைவன்; துணை போகும் வனத்துறையினர். அழியப்போகும் கூடலூர் வனங்கள்!' என்ற தலைப்பிட்டு ஒரு மர ஆலை உரிமையாளருக்கு எதிராக துண்டுப் பிரசுரத்தை அச்சடித்து நகரெங்கும் ஒட்ட ஆரம்பித்து விட்டனர்.
அந்த துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்றிருந்த வாசகங்களின் சாராம்சம் இதுதான்.
''கூடலூர், பந்தலூர் தாலுகாக்களுக்குட்பட்ட போஸ்பாரா, பிதிர்காடு, மேபீல்டு, ராக்வுட், மர்த்தமா நகர் போன்ற இடங்களில் ஏராளமான ஈட்டி மரங்கள் சமீப காலமாக வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. அத்தனையும் கூடலூரிலுள்ள ஒரு மர அறுவை ஆலையில்தான் அறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைக்கு சொந்தக்காரர் சஜீவன் என்பவர். இவர் வனத்துறை அனுமதி இல்லாமல் அந்த ஆலையை நடத்துகிறார். அதை மூடச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வந்தும், இன்னமும் மூடாமல் வனத்துறையினர் அந்த மர அறுவை மில்லுக்கு ஒத்துழைப்பது ஏன்? சஜீவனை இயக்கும் சக்தி எது? இங்குள்ள மாவட்ட வனத்துறை அலுவலரா?''
இந்த துண்டு பிரசுரங்களை 27.09.205 தேதியன்று இரவு கூடலூரில் உள்ள அரசு அலுவலகங்கள் எதிரே உள்ள சுவர்களில் ஒட்டியிருக்கிறது பாமக குழு. ஆனால் அப்போதே இதை எப்படியோ அறிந்து கொண்ட வனத்துறையினர், பின்னாலேயே வந்து நோட்டீஸ் ஒட்டியவர்களை மிரட்டி விரட்டியுள்ளனர். துண்டுப் பிரசுரங்களை கிழித்தெறியவும் செய்துள்ளனர்.
இதையடுத்து நோட்டீஸ்களை இரவில் ஒட்டினால்தானே வந்து மிரட்டுவார்கள். கிழிப்பார்கள். பகலில் ஒட்டினால் என்ன செய்ய முடியும்? என்று முடிவெடுத்துள்ளனர் நோட்டீஸ் ஒட்டியவர்கள்.
அடுத்த நாள் மதியம். இதற்கென கூடலூர் பாமகவின் ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அன்பழகன், முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். நகரில் நடுநாயகமாக இருக்கும் தங்கமணி தியேட்டர் அருகாமையில் நோட்டீஸ்களை ஒட்டவும் தொடங்கியுள்ளனர்.
இங்கேதான் வந்தது சிக்கல். சுமார் மதியம் ஒரு மணி. இவர்கள் நோட்டீஸ் ஒட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு இரண்டு மாருதி வேன்கள். அதில் நிறைய வந்த ஆட்கள், இறங்கி ஓடி வந்து இவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். நோட்டீஸ் ஒட்டியவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இறுதியில் பாமகவினரைத் தாக்க வந்த கும்பல், கார்களில் தொற்றிக் கொண்டு தப்பியுள்ளனர். எதிர்தரப்பு அடிபட்டவர்களை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளது.
அங்கே இவர்களுக்கும் முன்பாகவே மர மில் அதிபர் சஜீவன் நின்று கொண்டிருந்தார். போலீஸ் அவரிடம் புகார் வாங்கிக் கொண்டு இவர்கள் மேல் புகார் பதிவு முயற்சித்திருக்கிறது.
இதனால் கொதிப்படைந்த பாமக தரப்பினர் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, பாஜக என சகல கட்சியினருக்கும் போன் செய்து வரவழைத்து விட்டனர். விளைவு அங்கே ஒரு சூழல் மோசமாக வேறு வழியில்லாமல் அடிபட்ட பாமகவினரிடம் புகார் வாங்கி விட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர் போலீஸார். சஜீவன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேரை கைது செய்தனர். இவர்களை புகைப்படம் எடுக்கக்கூட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அப்போதே சஜீவனுக்கு போலீஸ் ஸ்டேஷனில் அபரிமித செல்வாக்கு இருந்தது.
இதைக் கண்டித்து நகரில் 30.09.2015 அன்று நகரில் முழு கடையடைப்பும், கண்டனப் பொதுக்கூட்டமும் நடந்தது. அடுத்ததாக 12-ம் தேதி கூடலூர் வனத்துறை அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் செய்தனர் பல்வேறு கட்சியினர்.
இந்த விவகாரத்தில் அடிபட்டவர்கள், ''எங்கள் மீதான தாக்குதலில் சஜீவன் மட்டுமல்ல, வனத்துறை அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் வனக் கொள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர். எனவே அவர்கள் மீதும் வழக்கு போடவேண்டும். வேலையிலிருந்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்!'' என்றும் கொந்தளித்தனர்.
அடிபட்டவர்களில் ஒருவரான முஜிபூர் ரஹிமான் கூறும்போது, ''அந்த சஜீவன் கேரளாக்காரர். ஏழு வருஷம் முன்னால இங்கே தச்சரா வேலைக்கு வந்தார். கூலிக்கு தச்சு வேலை பார்த்துட்டு இருந்தார். அப்படியே பெரிய அரசியல்வாதிகளுக்கும் (கோடநாடு பர்னிஷிங் வேலைகள் உட்பட) வனத்துறை அதிகாரிகளுக்கும் ஃபர்னிச்சர் அயிட்டங்கள் செஞ்சு கொடுத்திட்டு இருந்தார். அப்படி பல அதிகாரிகள் கொடுத்த சப்போர்ட்டுல, ஒரு மர மில்லையும், ஃபர்னிச்சர் கடையையும் வைத்தார். இதில் அறுக்கப்படும் மரமெல்லாமே ஈட்டி மரங்கள்தான். இதை எல்லாம் ஃபர்னிச்சர் ஆக்கி மைசூருக்கு அனுப்பி வருகிறார். இதற்கென்றே கேரளத்திலிருந்து 67 பேரை கொண்டு வந்து வேலைக்கு வைத்திருக்கிறார். அவங்க பண்றதே ரவுடித்தனம்தான். மரக்கடத்தல்தான். இதுக்கு ஏற்கெனவே இருந்த டிஎப்ஓ மறைமுக சப்போர்ட்டா இருந்தார். அதுவே இந்த டிஎப்ஓ வந்த பின்னாடி நேரடி சப்போர்ட்டா மாறிப்போச்சு!'' என்று விரிவாகச் சொன்னார்.
இந்த சம்பவம் பற்றி கூடலூர் விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் இரா.வனச்சந்திரன் பேசும்போது, ''உத்தரவுகளை மதிக்காமல் பல்வேறு சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுகிறார் கூடலூர் டி.எப்.ஓ. அதையெல்லாம் அரசுக்கு புள்ளி விவரமாகப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் புகார்கள் அனுப்பியுள்ளன. இதுவரை சின்ன நடவடிக்கை கூட இல்லை. இப்போது நெருக்கடி கொடுத்த பின்னரே பெயருக்கு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இனி புகாருக்கு வேலையே இல்லை. இனி இப்படி நடந்தால் போராட்டம் மட்டும்தான்!'' என்றார்.
இதைப்பற்றி அப்போதைய டிஎப்ஓ (மாவட்ட வன அலுவலர்) பேசும்போது, ''அந்த மில்லுக்காரருக்கும், சில அரசியல் கட்சிக்காரங்களுக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்சினை உள்ளது. அதை இப்படி பிரச்சினை ஆக்குறாங்க. அந்த மர மில்லில் நாங்கள் சோதனை செய்த வரை எந்த ஒரு சட்டவிரோதச் செயலும் நடப்பதாகத் தெரியவில்லை. அதை நாங்கள் மக்களிடம் தெரியப்படுத்தியும் வந்திருக்கிறறோம். அப்படியிருந்தும் சில பேர் எங்க மேலேயே அவதூறு கிளப்பி நோட்டீஸ் அச்சடிச்சு ஒட்டியிருக்காங்க. இதை நான் சும்மா விடமாட்டேன். ஐகோர்ட்டுக்கு போய் அவங்க மேல எல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்!'' என்றார்.
அந்த வனத்துறை அலுவலர் பிறகு நீதிமன்றம் சென்றாரா; தன் மீது அவதூறு கிளப்பியவர்கள் மீது வழக்குப் போட்டு நடவடிக்கை எடுத்தாரா? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.
ஆனால் ஒன்று. இந்த சம்பவம் நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது சஜீவன் பின்னால் மாவட்ட வன அலுவலர்களே இருந்துள்ளனர். அவர்கள் எல்லாம் வனத்தை காப்பாற்றினார்களா. வனவிலங்குகளை காப்பாற்றுவதில் முயற்சி எடுத்தார்களா. பொதுமக்களுக்கான செக்சன் 17 நிலங்களில் உள்ள பிரச்சினையை தீர்த்து அந்த மக்களுக்கு பட்டா கொடுத்து விட்டு, எஞ்சிய நிலங்களை வனத்துடன் சேர்க்க அக்கறை கொண்டார்களா? என்றால் அதுதான் இல்லை.
அந்தப் பிரச்சினைகள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் அப்பிரச்சினைகள் எல்லாம் பெரியதாகி விஸ்வரூபம் எடுத்தே நிற்கிறது. ஆனால் இப்போது அதே செக்சன் -17 நிலங்களில் சஜீவனுக்கு மட்டும் மின் இணைப்பு, ஒரே நாளில் பத்திரப் பதிவு எல்லாம் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அப்போதைய அதிகாரிகள் மட்டுமல்ல, இப்போதைய அதிகாரிகள் கூட யாருக்கு, எதற்கு சேவகம் செய்து வருகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது.
அதை விட அந்த சஜீவன் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் முழுமையான அதிகாரம் படைத்தவராக விளங்கியிருக்கிறார். இப்பவும் விளங்குகிறார். நீலகிரி மாவட்டத்தில் வரும் அதிமுக பிரமுகர்களை தேர்வு செய்வதிலும், வேட்பாளர்கள் தேர்விலும், தேர்தலுக்கு தேர்தல் அவர்களை வெற்றிபெற வைக்கும் செலவுகளை செய்வதிலும் தன்னிகரற்று விளங்கியிருக்கிறார்.
எஸ்டேட் காவலாளி மர்மக் கொலை விஷயத்திலும் அவரே முதன்மை சர்ச்சைகளில் பேசப்பட்டிருக்கிறார். நாட்டிலேயே பெரிய அளவில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையில் இவர் வீடுகளும், எஸ்டேட்டுகளும், அலுவலகங்களும் அகப்பட்டிருக்கின்றன.
20 வருடம் முன்பு கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு தச்சராக வந்த ஒரு கூலிக்காரர் கூடலூரில் இந்த அளவுக்கு சர்ச்சைகளுக்குள் சென்றிருக்கிறார் என்றால், கூடலூரின் வனவளங்களும், கானுயிர்களின் சுவாசங்களும் எப்படியெல்லாம் காப்பாற்றப்பட்டிருக்கும்? இவரைப் போல் எத்தனை பேர் இங்கே உருவாகியிருப்பார்கள்? அப்படித்தான் ரோஸ்வுட், சஜீவன் சர்ச்சைகள் கூடலூரை பாடாய்படுத்திய காலத்திற்கு சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பே 'வெட்டாதே, வெட்டாதே மூங்கில்களை வெட்டாதே!' கோஷம் இங்குள்ள மக்களிடம் எதிரொலித்தது.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
