

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா தேர்தல் நடத்தை விதிமுறையை மீறவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கலவரம் பாதித்த முஸாபர் நகரில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அமித் ஷா. அப்போது, வகுப்பு மோதலுக்குக் காரணமானவர்களை பழிவாங் குவதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசினார். இவ்வாறு சர்ச்சைக்குரிய வகை யில் பேசியதற்காக தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், "அமித் ஷா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இறுதியானது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அமித் ஷா தேர்தல் நடத்தை விதிமுறையை மீறவில்லை. அவருடைய பேச்சு அடங்கிய பதிவை முழுமையாக ஆய்வு செய்தபிறகுதான் இதைச் சொல்கிறேன்" என்றார்.
அதேநேரம், வகுப்பு மோதலை தூண்டும் வகையில் பேசிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஆசம் கான் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதை பிரசாத் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆசம் கான், வகுப்பு மோதலைத் தூண்டும் வகையில் பேசி உள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியதற்கு ஆதாரம் உள்ளது" என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அமித் ஷா மற்றும் ஆசம் கான் ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தது. முன்னதாக உபியில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என இந்த இரு தலைவர்களுக்கும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.