

திமுக-வின் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, தமிழகம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தருமபுரிக்கு பிரச்சாரத்துக்கு வந்திருந்த அவர், ‘தி இந்து-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுக-வில், இந்த முறை இரண்டே இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டும்தான் களத்தில் உள்ளனர். இது பொதுவெளியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே? இந்த விமர்சனத்துக்கு பெண்ணாக இருக்கும் உங்களின் கருத்து என்ன?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க அனைத்து கட்சிகளிலுமே பெண் வேட்பாளர்கள் குறைவுதான். பொதுவாக அரசியல் என்பது ஆண்களுக்கான களம் என்கிற நிலை மாற, இடஒதுக்கீடு விவகாரம் நாடாளுமன்றத்தில் சட்ட வடிவமாக வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி மதுரை பொதுக்கூட்டத்தில் உரிய நேரத்துக்கு முன்னதாகவே தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டுவிட்டார். அவர் மிகவும் உடல் சோர்வுடன் இருப்பதாகத் தோன்றுகிறதே?
ஒரே நாளில் 3 இடங்களில் பேச வேண்டியிருக்கிறது. தொடர்ந்து அலைச்சல், பயணம், உணவு முறை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் இயல்பான சோர்வுதான் அது.
மின் தடையை, அரசியல் எதிரிகள் செய்யும் சதி என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை. மின் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவரே சொல்வது வேடிக்கையாகத்தான் உள்ளது. தன் தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவது ஜெயலலிதாவின் தொடர் வாடிக்கை. இது ஒன்றும் புதிதல்ல.
மதுரை பக்கம் நீங்கள் இதுவரைக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள செல்லாமல் இருப்பது ஏன்? பிரத்தியேக காரணம் ஏதாவது உண்டா?
நான் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை தலைமைக் கழகம் தயார் செய்து தந்துள்ளது. அப்படி தலைமைக் கழகம் ஒதுக்கிய பட்டியலில் மதுரை இடம்பெறவில்லை. தலைவர் பிரச்சாரத்துக்கு போகமுடியாத இடங்களுக்கு எல்லாம் என்னைப் போன்றவர்களை அனுப்பிவைத்து சமன் செய்கிறது தலைமை. மதுரை பக்கம் செல்லாததற்கு பிரத்தியேக காரணம் எதுவும் கிடையாது.
மோடியின் மணவாழ்வு பற்றி எழுந்திருக்கும் சலசலப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர்கள் பிரிந்ததுக்கான காரணம் யாருக்கும் தெரியாதவை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தகவலை மறைத்தது சரியா, தவறா என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
2ஜி விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு இல்லை என்கிறார் கருணாநிதி. அப்படியெனில் பிரச்சாரக் களத்தில் காங்கிரஸின் 2ஜி விவகார முகத் திரை ஏன் திமுக-வால் அகற்றப்படவில்லை?
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பற்றி பேச வேண்டாம்.