

தனது தாய் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் மட்டுமே பிரச்சாரம் செய்வேன் என்று பிரியங்கா வதேரா கூறியுள்ளார்.
தன் கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தங்கள் தொகுதிகளில் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என என்னிடம் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். எனினும், எனது தாய் மற்றும் சகோதரனுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்வேன் என்றார். நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிச்சயமாக அப்படி எந்த அலையும் இல்லை என்று பிரியங்கா பதிலளித்தார்.
பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டுமென காங்கிரஸார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய், பிரியங்காவை மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ள அழைக்க இருப்பதாக கூறியிருந்தார்.
மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான குஜராத் மாநிலம் வதோதராவின் காங்கிரஸ் வேட்பாளரான மதுசூதன் மிஸ்திரி யும், பிரியங்கா தனக்காக பிரச்சாரம் செய்தால் மகிழ்வேன் என தெரிவித்து இருந்தார்.
42 வயதாகும் பிரியங்கா, இரு சிறு குழந்தைகள் இருப்பதால் தன்னால் அரசியலில் நேரடியாக இறங்க முடியவில்லை என்று கூறி வருகிறார். எனினும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் பிரியங்கா அங்கு தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.