

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் 22-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரச்சாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் திறந்த வேனில் வாக்கு சேகரித்து வருகின் றனர்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வெளிமாவட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் வீதிவீதியாக சென்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பிரச்சாரம் செய்கிறார். அதைத்தொடர்ந்து தில்லை கங்கா நகரிலும், ஆலந்தூர் நீதிமன்றம் அருகிலும் ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ரசாக் கார்டன் சந்திப்பு, சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்துப் பேசுகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர் ஆகிய இடங்களில் தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
மேலும் 20, 21 ஆகிய தேதிகளிலும் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மூவரும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதி 22-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண தெருவில் நடக்கும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.