

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்எஸ்) ஆட்சிக்கு வந்தால், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் கூறினார்.
தெலங்கானாவின் மேடக் மாவட்டம், கஜ்வெல் சட்டமன்ற தொகுதியில் சந்திரசேகர ராவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் கஜ்வெல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் அரசின் ஊழல் காரணமாக மாநிலம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல அமைச் சர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு உள்ளது. டி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்கும். ஊழல் அரசியல் வாதிகள், அதிகாரிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சிக்கு வந்தால் தாங்கள் அபகரித்து வைத்துள்ள நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என சீமாந்திரா பகுதி அரசியல் தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் டிஆர்எஸ் ஆட்சிக்கு வராமல் தடுக்க அவர்கள் சதி செய்கின்றனர். இதன் ஒரு பகுதிதான் தெலங்கு தேசம் பாஜக இடையிலான கூட்டணி.
தெலங்கானாவை வலிமை யான மாநிலமாக்க டிஆர்.எஸ். கட்சிக்கு ஓட்டு போடுங்கள். ஒருங்கிணைந்த ஆந்திராவை ஆதரித்தவர்களுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது. பாஜகவுக்கு வாக்களித்தால், தெலுங்கு தேசம் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வந்துவிடும். தெலங்கானா மாநிலம் பெற்றுள்ளோம். அடுத்த சுய நிர்வாகத்தை பெறுவோம். தங்கத் தெலங்கானாவை உருவாக்குவோம் என்றார்.