

கடந்த 2 ஆண்டுகளாகவே தோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டு வருகிறது என்றும் இதனால் இந்தியா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் மும்பை ஒருநாள் போட்டியில் மந்தமாக ஆடியதால் இந்திய அணி 300 ரன்கள் இலக்கை எட்டாமல் குறைந்த இலக்கில் முடிந்து போனதால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
மீண்டும் டி20 தொடரில் கான்பூரில் 10 ஓவர்களுக்கு முன்பாக களமிறங்கியும் 18-வது ஓவரில் 28 பந்துகளில் 28 ரன்களையே எடுத்ததோடு, கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க முடியாமலும் தானும் பெரிய ஷாட்களை ஆட முடியாமலும் தோனி திணறியதால் இந்திய அணி தோல்வி தழுவியது.
இதனையடுத்து தோனியின் பேட்டிங் மீது விவிஎஸ் லஷ்மண், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர் போன்றவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர், மற்றும் சிலர் அவரை 2-ம் நிலையில் இறக்கிப்பார்க்கலாம் என்றும் வேறு சிலர் பவர் பிளேயின் போது அவர் எளிதில் அடிக்க முடியும் என்பதால் தொடக்கத்திலும் களமிறக்கலாம் என்றும் கூறிவருகின்றனர்.
முக்கியமாக மட்டையாளர்களுக்குச் சாதகமான் பிட்சில் தோனியினால் ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
எனவே தோனிக்குப் பதிலாக மாற்று இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களை பரிசீலிக்க வேண்டும் என்ற குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருப்பது பற்றி உங்கள் பார்வைகளை இங்கே விவாதியுங்கள்.