ஆர்எஸ்எஸ் ஒழுக்கத்துக்கு மோடியின் திருமண மறைப்பே உதாரணம்: டி.ராஜா

ஆர்எஸ்எஸ் ஒழுக்கத்துக்கு மோடியின் திருமண மறைப்பே உதாரணம்: டி.ராஜா
Updated on
1 min read

தனக்கு நடந்த திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்காமல், சட்டரீதியான நெருக்கடி வரும்போது மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் எத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா சனிக்கிழமை கடலூரில் நிருபர்களிடம் பேசியதாவது:

"ஆட்சி அமைக்கத் துடிக்கும் பாஜக, அதன் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் பின்னனிக் கொண்ட நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மோடி தனக்கு நடந்த திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் சட்டரீதியான நெருக்கடி வரும்போது தனது மனைவியின் பெயரை தேர்தல் விண்ணப்பத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் எத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கு மக்கள் தீர்ப்பளிக்கக் கூடிய தேர்தலாக இது விளங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையால் நாடு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் விளைவாக விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மதவாத அரசு அமைவதை மக்கள் தடுக்க முன்வர வேண்டும்.

மின்தட்டுப்பாட்டுக்கு சிலர் சதி செய்கிறார்கள் எனக் கூறும் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் பொதுவாக பேசாமல், சதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தன்னை ஒரு கம்யூனிஸ்ட் எனக்கூறும் கருணாநிதி,அவர் யாரோடு இருக்கிறார்என்பதை தெளிவுபடுத்தட்டும்நாங்கள் யாரோடு இருப்பது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்வோம். காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும் என்பதுதான் இடதுசாரி கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இடதுசாரிகள் வலிமையுடன் இருந்தால் தாங்கள் நினைத்ததை செய்ய முடியாது என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவோம். இந்தியாவை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. தேர்தல் ஆணையத்துக்கு போதிய அதிகாரம் இல்லாததே இதற்கு காரணம். கூடங்குளம் அணு உலையில் 3 மற்றும் 4-வது விரிவாக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் அணு உலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய திட்டங்களை அறிவிக்ககூடாது என்கிற தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறிய செயலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம்" என்றார் டி.ராஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in